₹60.00
MRPGenre
Print Length
176 pages
Language
Tamil
Publisher
Thirumagal Nilayam
Publication date
1 January 2010
Weight
358 gram
கதவு திறந்தது.
பாவை நின்றாள்
தோட்டம் ஒரு இளவரசியின் கனவு நந்தவனம் போல விரிந்தது.
ரோஜா! ரோஜா! ரோஜா! அன்றைய விடியலே ஒரு பெரிய ரோஜா மலரைப் போல சுத்தமும் அழகும் கொண்டு அவளுடைய கடை திறப்புக்காக காத்திருந்து, திறந்தவுடன் கைகளில் பவ்யத்துடன் வந்தமர்வதைப் போல இருந்தது.
'எனதழகு ரோஜாக்களே! எனதருமை ரோஜாக்களே! காலை வணக்கம்! இந்தப் புத்தம் புதிய நாள் உங்களுக்கும், உங்கள் மூலமாக எனக்கும் மிக ரம்மியமான நாளாக மாறக் கடவதாக!’
வழக்கம் போல அவள் தன் காலை நடையை அத்தனை ரோஜாச் செடிகளுக்கும் ஊடாக நடந்து, ரோஜாக்களை அணைத்து, சின்னஞ்சிறு மொட்டுகளை முத்தமிட்டு மனதில் ஊறிய உற்சாகமும் அமைதியுமாக வீட்டுக்குள் நுழைந்தாள்.
வீராவின் குரல் கேட்டது.
“இருடா வீரா இதோ வந்துட்டேன்...” என்று பாலை எடுத்துக் காய்ச்சினாள்.
தனக்கு ஒரு கோப்பை தேநீர் தயாரித்துக் கொண்டபோது சடசடவென்று வெளியில் மழைத்தூறல்கள் விழுகின்ற ஓசை கேட்டது.
'நல்ல வானம், நல்ல மழை, நல்ல ஊர்' என்று செல்லமாகத் திட்டிக் கொண்டாள்.
வீராவின் குரல் இப்போது வலுவாகக் கேட்டது.
“டேய் டேய் இருடா என் தங்கக்கட்டி... பால் ஆற வேண்டாமா? கொஞ்சம் பொறுத்துக்கடா பசியை...” என்று சொன்னதும் வீரா சட்டென்று குரலை நிறுத்திவிட, அவன் வேகமாக முன்னறைக்குப் போனாள்.
அவளைப் பார்த்தவுடன் வீராவின் முகத்தில் தெரிந்த மலர்ச்சி! அது வாலை இப்படியும் அப்படியும் ஆட்டி ஆட்டி வெளிப்படுத்திய அன்புப் பரவசம்! ஓ, இதை விட அழகா அந்த ரோஜாத் தோட்டம்!
இல்லை. இல்லை. இதுவும் அழகு. அதுவும் அழகு. வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் அழகுதான். உலகத்தின் எல்லா கணங்களும் அழகுதான். பூமி அழகாயிருக்கும் போது, நிலவு அழகாயிருக்கும் போது, நட்சத்திரங்கள், மேகம், மலை, கடல், அருவி, நதி, காட்டாறு என்று எல்லாமே அழகாக இருக்கும் போது காலம் மட்டும் எப்படி அழகற்றதாகி விட முடியும்?
“வீரா... இன்னிக்கு உனக்கு ஸ்பெஷல் சாப்பாடுடா... என்ன தெரியுமா? பால்லயே வெந்த சாதம்... அதுல பெடிக்ரீ... அப்புறம் தண்ணி கலக்காத ரெண்டு கவர் பால்... சரியா?” என்று அதன் தலையைத் தடவி புன்னகைத்தாள்.
'சரிசரி' என்று சந்தோஷத்துடன் தலையாட்டி விட்டு அவள் முழங்கால்களுக்கிடையில் தலையை புதைத்துக் கொண்டது அது.
வீரா! எவ்வளவு அன்பு உனக்கு! எப்படியடா இவ்வளவு பாசத்தை வளர்த்துக் கொண்டாய்! இவ்வளவு மெல்லிய உணர்வுகள் கொண்ட உங்கள் இனம் ஏனடா பேசும் கலையை அறிந்து கொள்ளாமல் போயிற்று! சரி வேண்டாம்! பேச்சு என்ன பேச்சு, பெரிய பேச்சு! வாய்ச்சொற்களால் ஒரு பயனும் இல்லைதான்! எத்தனை மனிதர்களுக்கு வார்த்தைகளை வைத்துக் கொண்டு அழகாக உரையாடத் தெரிகிறது? நூற்றில் இரண்டு அல்லது மூன்று பேர் தேறினால் அதிகம். ஒரு குறைவுமில்லையடா வீரா! மவுனமே பார்வையாய், ஜாடையே பாஷையாய் நீ எப்போதும் சந்தோஷமாகவே இருடா என் கண்ணே!
“அக்கா...” என்று குரல் கேட்டது. வாசல் கதவிற்கு வெளியிலிருந்து.
கனகுவின் குரல் அது என்று புரிய உடனே அவள் எழுந்து போய் கதவைத் திறந்தாள்.
மழையில் ஏறக்குறைய முழுமையாக நனைந்து போன உடையும், வருத்தம் அப்பிய முகமுமாக கனகு நின்றாள். பக்கத்திலேயே அவளுடைய மகள் செம்மணி. முகம் முழுவதும் அழுகையும் அச்சமும் பரவிக் கிடந்தன. மகளின் விரல்களை வலிக்கும் அளவிற்கு இறுக்கமாக பற்றியிருந்தாள் கனகு.
“உள்ள வா கனகு... இதென்ன மழைல இப்படி தெப்பமா நனைஞ்சுகிட்டு வந்திருக்க? குட்டிய வேற கூட்டிக்கிட்டு வந்திருக்கே? வா வா உள்ள வா...” என்றாள் வேகமாக.
“உன்கிட்ட மன்னிப்பு கேக்கத்தான் வந்திருக்கேன் அக்கா...” என்றாள் கனகு குரல் தழுதழுக்க.
“மன்னிப்பா? எதுக்கும்மா?”
“என்னைய நம்பித்தானே வூட்டுக்குள்ள வுடறே? போன வாரம் உன் பர்சு காணாம போச்சில்லே? நான் கூட ரொம்ப கவலைப்பட்டு வீடு பூரா தேடுன்னேல? இந்த பாதகத்தி செம்மணிதாங்க்கா திருடியிருக்கா...”
“அட அப்படியா?” என்றாள் வியப்புடன்.
“ரெண்டு நாளா ஒரு மாதிரி சுத்திவிட்டாப்புல இருக்குறா... அப்பப்ப மூலைல சுருண்டு படுக்குறா... என்னடி பொண்ணே வவுத்து வலியான்னு கேட்டேன். அழுது ஒப்பாரி வெச்சா... பானைத்துணிக்குக் கீழ சுருட்டி வெச்சிருந்ததை எடுத்து நீட்டுனா... ஆடிப்புட்டேன்க்கா... உங்க பர்சுக்கா... மிதி மிதின்னு மிதிச்சு இங்க இட்டாந்திருக்கேன்... நீயும் நாலு சாத்து சாத்துக்கா... பாவிமக... மானத்தோட பொழச்சு வாழத்தான ஊரு விட்டு ஊரு வந்திருக்கோம். இப்படி திருட்டுக்களுதயா இருக்காளே... அக்கா உன் கையால அவளுக்கு தண்டனை கொடுக்கா...” என்று பர்ஸை அவள் கையில் வைத்துவிட்டு கனகு அழுதாள்.
“அவ்வளவு தானே? இதோ கொடுக்கிறேன்” என்று பாவை உள்ளே விரைந்தாள்.
மழை இன்னும் அதிகமாகவே பெய்து கொண்டிருந்தது. ஓசையும் மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டே வந்தது.
0
out of 5